புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யப்பட்டியைச் சேர்ந்த பிரம்மன் என்பவரது மகன் பிரபு (43). இவர் திருமயம் கடைவீதியில் பழனி ஆண்டவர் பர்னிச்சர் என்ற கடையை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள தனது குடோனில் பிரபு பொருட்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்களான மெய்யப்பட்டியைச் சேர்ந்த துரை (28) மற்றும் கார்த்திக் (30) ஆகிய இருவரும் பிரபுவிடம் சம்பளப் பாக்கி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த இருவரும் பிரபுவை கைகளால் தாக்கியுள்ளனர். இதில் எதிரிகள் கையில் அணிந்திருந்த காப்பினால் பிரபுவின் மீது பலமாக அடி விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருமயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் பெரியளவில் தென்படவில்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட துரை மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பலியான பிரபுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தகாத உறவை தட்டிக்கேட்ட 6 மாத கர்ப்பிணி... கழுத்தை நெரித்து கதற கதற கொன்ற உறவினர் கும்பல்...!