மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையத்தில் அவர்கள் பிடிபட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மகாராஷ்டிராவையும், மற்ற இருவர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் இணைந்து நடத்திய நடவடிக்கையில், மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் இவர்கள்தானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால், கைது செய்யப்பட்டவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” டைகர் ஷெராப் தாக்குதல் விவகாரத்தில் பட்னவிஸ் அதிரடி!
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையின் ஜூஹூ பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு டைகர் ஷ்ராஃப் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் நடிகர் டைகர் ஷ்ராஃப் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், அவரது கார் ஓட்டுநர் மீது தோட்டா பாய்ந்து காயமடைந்தார். சம்பவ இடத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தாக்குதலின் பின்னணி குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் தப்பிச் சென்ற நிலையில், அவர்களைப் பிடிக்க மும்பை காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். இந்த வழக்கை விசாரிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் தகவலும் வெளியாகியுள்ளது. எனினும், அந்தக் கும்பலுக்குச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் யார், தாக்குதலுக்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தோட்டாக்களுக்கு தோட்டாக்களால் பதிலடி!” டைகர் ஷ்ராஃப் விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே அதிரடி வார்னிங்!