சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் செலவு மற்றும் நடத்தை விதிகளை மீறுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.23.28 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசுப் பொருட்கள், மது, போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகளை கண்காணிக்க 234 தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 2,160 பறக்கும் படைகளும் 2,160 நிலை கண்காணிப்பு குழுக்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இதுதவிர வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் இணைந்து செயல்படுகின்றன. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் மட்டுமே செலவு செய்ய அனுமதி உள்ள நிலையில், இந்த குழுக்கள் மூலம் தேர்தல் செலவுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு!! தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம்!! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இதுவரை 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 61 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை தொடர்கிறது. அரசு பொது இடங்கள், கட்டிடங்களில் தற்போது அரசியலில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவை உடனடியாக மறைக்கப்பட வேண்டும் என்றும், காலம் சென்ற தலைவர்களின் சிலைகள் மறைக்கத் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரொக்கம் எடுத்துச் செல்லும் போது அதன் ஆதாரம், நோக்கம் குறித்து எழுத்து ரூபத்தில் விளக்கம் அளித்தால், அது வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான தொகை இல்லை என தணிக்கை அதிகாரிகள் உறுதி செய்தால் உடனடியாக திருப்பி வழங்கப்படும். பறிமுதல் செய்யப்படாது. முறையீடு தேவைப்பட்டால் மாவட்ட குறைதீர் குழுவை அணுகலாம் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்கள் புகார்களை உடனடியாக பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமமான தேர்தல் சூழலை உருவாக்குவதே இந்த கடும் கண்காணிப்பின் நோக்கம் என்று தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகள் தேர்தல் களத்தில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: NDA ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் படம் மிஸ்ஸிங்... பாஜகவின் தனி ஆவர்த்தனத்தால் பரபரப்பு...!