இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள க்ரம்சால் பகுதியின் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரேஷன் யூத ஆலயத்தில், யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் வழிபாட்டின்போது பயங்கரவாத தாக்குதல் நடந்தது.
காரில் மோதி, கத்தி தாக்கிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர். குற்றவாளி போலீஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இங்கிலாந்து போலீஸ் இதை பயங்கரவாத சம்பவமாக அறிவித்துள்ளது. இந்தியா, பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நேற்று (அக்டோபர் 2) உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு, யோம் கிப்பூர் வழிபாட்டுக்கு ஆலயத்தில் ஏராளமான யூத சமூகத்தினர் கூடியிருந்தனர். அப்போது, ஒரு நபர் காரை ஓட்டி வந்து ஆலய அருகே சென்ற பாதசாரிகள் மீது மோதினார். பின்னர் காரிலிருந்து இறங்கி, ஒரு பாதுகாப்பு பணியாளரை கத்தியால் தாக்கினார்.
இதையும் படிங்க: யார் மீதும் பழி போடாதீங்க…! மக்களின் பாதுகாப்பு முக்கியம்… நீதிமன்றம் திட்டவட்டம்…!
இதில் 2 பேர் உடனடியாக உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸ் தகவல்படி, குற்றவாளி ஜிஹாத் அல்-ஷமீ (35), பிரிட்டிஷ் குடிமகன், சிரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
தகவலறிந்த போலீஸ், குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர் வெடிகுண்டு அங்கியை அணிந்திருந்ததாகவும் தெரிகிறது.
சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் வெடிகுண்டு வைத்திருக்கிறார்" என்று பொதுமக்களை எச்சரித்த சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தை சோதனை செய்தனர்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், டென்மார்க்கில் உள்ள ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் இருந்து பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார். அவர், "இது யூதர்களை இலக்காகக் கொண்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல். யூத எதிர்ப்பு மீண்டும் தலைவிரித்தது," என கூறினார். நாடு முழுவதும் உள்ள யூத ஆலயங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா, "மான்செஸ்டரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை. பயங்கரவாதத்தை வலிமையும் ஒற்றுமையும் தோற்கடிக்கும்," என தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த கொடூர செயலை கண்டிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக சமூகம் ஒன்றுபட்டு போராட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு," எனக் கூறியுள்ளது.
இந்த தாக்குதல், யோம் கிப்பூர் போன்ற புனித நாளில் நடந்ததால் யூத சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உலக அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமை அழைப்பு வலுப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவம்... மதுரை கிளையில் மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்...!