சென்னை: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் டிசம்பர் 31ஆம் தேதி காலை சென்னை கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டச் செயலர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) முடிந்த பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடைபெறும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான முறைகேடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக நிர்வாகி ஒருவர் இது தொடர்பாக தெரிவித்ததாவது: “திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு தொகுதியிலும் 30,000 முதல் ஒரு லட்சம் வரை முறைகேடாக வாக்காளர்களைச் சேர்த்திருந்தனர். எஸ்ஐஆர் பணியில் இது வெளிப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலேயே ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பறிபோகும் ராஜ்யசபா எம்.பி சீட்! பரிதாப நிலையில் மாநில கட்சிகள்!! வளைத்துபோடும் பாஜக!!

ஜனவரி 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்களைச் சேர்க்க திமுக திட்டமிட்டு செயல்படுகிறது. இதை முறியடிக்கவும், அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் விடுபடாமல் சேர்க்கவும் கூட்டத்தில் வியூகங்கள் வகுக்கப்படும்” என்றார்.
மேலும், கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அமமுக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியை கூட்டணியில் சேர்ப்பது, வேட்பாளர் தேர்வு, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்தக் கூட்டம் அதிமுகவின் தேர்தல் தயாரிப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அன்றும், இன்றும், என்றும் எங்கள் வாத்தியார்! எம்.ஜி.ஆர். நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி உருக்கம்!