தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
தேர்தலை முன்னிட்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவரும் வகையிலான அதிரடி அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டன. அதற்கு முன்னூதாரணமாகவே மகளிர் வங்கிக் கணக்குகளில் 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட்டிலும் பெண்களை கவரும் வகையிலான திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்து வருகிறார்.
தங்கம் தென்னரசு கூறியதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி அடைந்தது. மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகள் இதயம் நெகிழும் வண்ணம் ஒரே நாளில் 6500 கோடி தொகையை ஏழை மக்களின் கையில் சென்று சேர்த்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றார்.
இதையும் படிங்க: #BREAKING ஆரம்பமே அதிரடி...!! - இவர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள்... இடைக்கால பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் அறிவிப்பு...!
மகளிர்க்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் விடியல் பயணத்தின் மூலம் சராசரியாக 888 ரூபாய் மாதத்திற்கு பெண்கள் சேமிக்கின்றனர் என்றும், விடியல் பயண திட்டத்தின் கீழ் பெண்கள் 881 கோடி முறை அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஏற்கனவே திமுக அரசுன் தோழி விடுதிகள் பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், பணிபுரியும் மகளிருக்காக அவர்கள் பணிபுரியும் இடங்களிலேயே “குழந்தை காப்பகங்கள்” அமைக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!