ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் , மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகநத்தம்பட்டி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி, மாறி கற்களை வீசிக்கொண்டதோடு , கத்தி , உருட்டு கொட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். துக்க நிகழ்ச்சிக்காக சேலத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் , சென்று விட்டு திரும்பும் போது வடுகநத்தம் பட்டி கிராமத்தில் திரண்டு இருந்த அன்புமணி ஆதரவாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரை தடுத்து நிறுத்தி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராமதாஸின் ஆதரவாளர்கள் ஏழு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதேபோல அன்புமணியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வாழப்பாடி போலீசார் , அருள் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அன்புமணி ஆதரவாளர்களான ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, அன்புமணி ஆதரவாளர்களான மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் தங்களது நிர்வாகிகளுடன் வந்து சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் அவர்களை சந்தித்து , அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக நடந்துள்ளதாகவும், அருள் எம் எல் ஏ மற்றும் அவரது ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் ஏராளமான சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.