கடந்த வார இறுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகளால் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆலிவ் அறுவடை பருவத்தில் பாலஸ்தீன விவசாயிகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஹெய்டி லெவின் மற்றும் ஐரோப்பிய தூதர்கள் குழுவினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் ராணுவம் மற்றும் ஷின் பெட் உளவுத்துறையுடன் இணைந்து ‘ஆலிவ் லீஃப்’ என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, சந்தேகத்தின் பேரில் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) ரமால்லாவுக்கு அருகிலுள்ள அபு ஃபலா கிராமத்தில் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து ஆலிவ் அறுவடைப் பணிகளைப் பதிவு செய்யச் சென்ற ஹெய்டி லெவின் மீது முகமூடி அணிந்த குடியேறிகள் தாக்குதல் நடத்தினர். சுமார் 50 முதல் 80 பேர் கொண்ட குழு ஒலிவ் தோப்புகளை நோக்கி ஓடி வந்து கற்களை வீசினர், மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
‘PRESS’ எனத் தெளிவாகக் குறிக்கப்பட்ட பாதுகாப்பு உடையும் ஹெல்மெட்டும் அணிந்திருந்த போதிலும், லெவின் தரையில் தள்ளி உதைக்கப்பட்டார். சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து உதைக்கப்பட்டதாகவும், கேமராக்கள், மொபைல் மற்றும் பிற பொருட்கள் பறிக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் இருந்து தெரிவித்தார். விலா எலும்பு முறிவு, நான்கு முதுகெலும்புகள் முறிவு மற்றும் விரல் அறுவை சிகிச்சை தேவைப்படும் கடுமையான காயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். மேலும் பாலஸ்தீனியர்கள் சிலரும் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு குறி..!! அதிரடி தாக்குதல் நடத்திய பாக்.,!! பதற்றம் உச்சம்!!

அடுத்த நாள் சனிக்கிழமை, தாய்பே (Taybeh) என்ற கிறிஸ்தவ பாலஸ்தீனக் கிராமத்தில் ஆலிவ் அறுவடையைப் பார்வையிடச் சென்ற ஐரோப்பிய தூதர்கள் குழுவினர் மீதும் தாக்குதல் நடந்தது. பிரான்ஸ், பெல்ஜியம், போலந்து நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர். பெல்ஜியத் தூதரக வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது; பிரெஞ்சு மேயர் ஒருவர் தாக்கப்பட்டார். முகமூடி அணிந்த குடியேறிகள் அடையாள அட்டைகளைக் கேட்டு அச்சுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேற்குக் கரையில் குடியேறிகளின் வன்முறையைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. அதையடுத்து நடத்தப்பட்ட ‘ஆலிவ் லீஃப்’ நடவடிக்கையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சம்பவங்களுடன் தொடர்புடைய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன; சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டன.
அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபீ இந்தக் கைதுகளை வரவேற்று, லெவின் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும் நடவடிக்கை எனக் குறிப்பிட்டார். மேற்குக் கரையில் ஆலிவ் அறுவடைக் காலத்தில் குடியேறிகளின் வன்முறை அதிகரித்து வருவது சர்வதேச கவலையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முதல்வரையே அசிங்கப்படுத்துவதா.? பொறுப்பு வேணாமா..? கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!