சர்வதேச கார் பந்தய சம்மேளனம் (FIA) மற்றும் பார்முலா-1 (F1) நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் உலகெங்கிலும் உள்ள கார் பந்தய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் மேகங்கள் வளைகுடா நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த F1 பந்தயங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல் அச்சம் காரணமாக, வீரர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என FIA திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக, ஏப்ரல் 12-ஆம் தேதி பஹ்ரைனின் சாகிர் ஓடுதளத்திலும், ஏப்ரல் 19-ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலும் நடைபெறவிருந்த பந்தயங்கள் கைவிடப்பட்டுள்ளன.

பஹ்ரைன் சர்வதேச ஓடுதளமானது அமெரிக்க ராணுவத் தளத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால், அங்கு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதால் இந்தப் போட்டிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று FIA தலைவர் முகமது பின் சுலாயம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!
இந்தப் போட்டிகளுக்கு மாற்றாக வேறு எங்கும் பந்தயங்கள் நடத்தப்படாது என்பதால், 2026 சீசன் 22 போட்டிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29-ல் நடைபெறும் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்குப் பிறகு, மே 3-ல் நடைபெறும் மியாமி கிராண்ட் பிரிக்ஸ் வரை சுமார் 5 வாரங்கள் ஃபார்முலா 1 ரசிகர்கள் பந்தயங்களைக் காண முடியாத ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையினால், ஃபார்முலா 1 நிர்வாகத்திற்குச் சுமார் 130 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹1,000 கோடிக்கும் அதிகம்) வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதன்மைப் போட்டிகளுடன் இணைந்து நடத்தப்படவிருந்த பார்முலா-2, பார்முலா-3 மற்றும் 'F1 அகாடமி' மகளிர் கார் பந்தயங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தாலும், வீரர்களின் உயிரை விட விளையாட்டு பெரியதல்ல என F1 தலைமை நிர்வாகி ஸ்டெபானோ டோமெனிகாலி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நிலைமை சீரான பிறகு, வரும் ஆண்டுகளில் மீண்டும் இந்தப் பகுதிக்கு பந்தயங்கள் திரும்பும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!