உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோய்க்கு ஒரு புதிய வழி கிடைத்துள்ளது. அதாவது ரஷியா புற்றுநோய்க்கு எதிரான புதிய mRNA தடுப்பூசியான “என்டரோமிக்ஸ்” 100 சதவீத செயல்திறனை மருத்துவ பரிசோதனைகளில் காட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசி, புற்றுநோய் செல்களை அழித்து, பெரிய கட்டிகளை சுருக்குவதற்கு உதவுவதாகவும், மருத்துவ ரீதியாக பாதுகாப்பானதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் சுகாதார அமைச்சகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கதிரியக்க மையம் மற்றும் எங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன.

என்டரோமிக்ஸ் தடுப்பூசி, கோவிட்-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பயனாக்கப்பட்டு, அவர்களின் கட்டியின் மரபணு பகுப்பாய்வு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கிறது. இதில் நான்கு பாதிப்பில்லாத வைரஸ்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டி வளர்ச்சியை தடுப்பதுடன், சில சந்தர்ப்பங்களில் புற்றுநோயை முற்றிலும் அழிக்கிறது. 48 தன்னார்வலர்கள் பங்கேற்ற மருத்துவ பரிசோதனைகளில் இந்த தடுப்பூசி எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!! நொறுங்கும் உக்ரைன்! குழந்தை உட்பட 10 பேர் பலி!!
ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கும் எனவும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போல அல்லாமல் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் சுகாதார அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு காத்திருக்கும் இந்த தடுப்பூசி, 2025 செப்டம்பர் அல்லது அக்டோபரில் பொது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதன்மையாக பெருங்குடல் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் என்றாலும், மார்பக, நுரையீரல் மற்றும் மெலனோமா போன்ற பிற புற்றுநோய்களுக்கும் பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் வெற்றி, உலகளவில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மருத்துவ வல்லுநர்கள், இது முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் மட்டுமே எனவும், பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் தேவை எனவும் எச்சரிக்கின்றனர். ரஷியாவின் இந்த முயற்சி, உலகளவில் நடைபெறும் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிகளுக்கு முக்கிய பங்களிப்பாக அமையும்.
இதையும் படிங்க: உக்ரைன் போர் எதிரொலி!! பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு!! தவிக்கும் ரஷ்யா!!