தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) தலைவர் வேல்முருகன், திமுக-வின் பதிலைப் பொறுத்துத் தனது கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவெடுக்கும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், கூட்டணியில் நீடிப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்த 2021 தேர்தலில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தவாக, இம்முறை தனது தனிச் சின்னத்தில் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால், திமுக தரப்பில் எண்ணிக்கையை அதிகரிக்கத் தயக்கம் காட்டுவதே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

திமுக தலைமையிடமிருந்து வரும் இறுதிப் பதிலைப் பொறுத்தே எங்களது அடுத்தகட்ட நகர்வு அமையும். தமிழ் மண் மற்றும் தமிழர் உரிமை சார்ந்த கோரிக்கைகளில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் இடங்களுக்காக அழுத்தம் கொடுத்து வருகின்றன. இத்தகைய சூழலில் வேல்முருகனின் இந்த தனித்துப் போட்டி எச்சரிக்கை திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இன்று மாலை 4 மணிக்குத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!