2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜெர்மனியில் தொழில் முதலீடுகள்:
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 31ம் தெதி ஜெர்மன் சென்றடைந்தார். டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மன் நாட்டு அரசு அதிகாரிகளும், தூதரக அதிகாரிகள் மற்றும் ஜெர்மனி வாழ் தமிழ் மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையும் படிங்க: “உங்க குடும்பத்துல ஒருத்தனா சொல்லுறேன்”- ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்த ஸ்டாலின்..!
அதனைத் தொடர்ந்து நேற்று டசெல்டோர்ஃபில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். தொடர்ந்து, ஜெர்மனி டசெல்டோர்ஃப் நகரில் நார் பிரெம்ஸ், நார்டெக்ஸ் குழுமம், இ.பி.எம்.-பாப்ஸ்ட் ஆகிய 3 நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
லண்டனில் உற்சாக வரவேற்பு:
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மலர் கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்ற தமிழர்கள், அவருடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” - தவெகவை நோஸ்கட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!