தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்த ஒரு வாரப் பயணத்தின் மூலம், தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்துறை மையமாக உயர்த்துவதற்கு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜெர்மனியில், முதலமைச்சர் ‘தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு’ மற்றும் ‘தமிழ்க் கனவு-2025’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 26 நிறுவனங்களுடன் ரூ.7,020 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதில், நார்-ப்ரெம்ஸ் நிறுவனம் ரயில்வே துறையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்தது, இதன்மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
இதையும் படிங்க: தமிழ் மேல் தீராக் காதல் கொண்டவர்.. ஜி.யு போப் கல்லறையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை..!!
மேலும், BMW குழுமத்துடன் மின்சார வாகனத் துறையில் முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது. ஜெர்மனி பயணத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது, இதனால் 1,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். மொத்தமாக, இந்தப் பயணத்தில் 33 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 17,613 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கமும் இதில் அடங்கும். இதுதவிர, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்று, பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் மற்றும் இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமியுடன் நடைபெற்ற சந்திப்புகளில் கல்வி, ஆராய்ச்சி, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பயணம் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், லண்டனில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்! என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே.. முதல்வர் மு.க ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்து..!!