வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்யும் நோக்கில் அமெரிக்க ராணுவம் ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தியது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் மதுரோவும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் நியூயார்க் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது வெனிசுலா ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். வெனிசுலா அதிகாரிகள் கூறுகையில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மொத்த உயிரிழப்பு 80க்கு மேல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெனிசுலா அதிபர் கைது விவகாரம்!! இன்று கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்! அதிகரிக்கும் பதற்றம்!

இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் கியூபாவைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளதாக கியூபா அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது.
வெனிசுலா அதிபராக மதுரோ பதவியேற்றது முதல் கியூபா அரசு அவருக்கு பாதுகாப்பு உதவி அளித்து வந்தது. வெனிசுலா அரசின் கோரிக்கையின் பேரில் கியூபா வீரர்கள் அங்கு பணியாற்றி வந்தனர். ஆனால், எத்தனை கியூபா வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இறந்த வீரர்களின் நினைவாக கியூபாவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த தாக்குதல் உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் இதை கண்டித்துள்ளன. இது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்!