பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நேரடி வர்த்தகம் தொடங்க உள்ளது. கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்தபின் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வர்த்தகம் நடக்கவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பாகிஸ்தானின் குவாசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேசத்துக்கு அரிசி ஏற்றுமதி நடக்க உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்த ஒப்பந்தம் இம்மாதத்தின் தொடக்கத்தில் இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து 50ஆயிரம் டன் அரிசி வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகம்(பிஎன்எஸ்சி) முதல்முறையாக சரக்குகளை ஏற்றிக்கொண்டு வங்கதேச துறைமுகத்துக்கு செல்ல உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் புதிய மைல்கல் என்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1971ம்ஆண்டு பாகிஸ்தானின் கிழக்குப்பகுதி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு தனியாகப் பிரிந்து வங்கதேசம் நாட்டை உருவாக்கினர். வங்கதேசம் உருவாக பெருமளவு இந்தியா உதவி செய்தது. வங்கதேசம் உதயமானபின் பாகிஸ்தானுடன் எந்தவிதமான தூதரக உறவு, நட்புறவு, வர்த்தக உறவும் வங்கதேசம் வைத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு தொடங்குவது குறித்து இம்மாதத்தின் தொடக்கத்தில் இருநாடு அதிகாரிகளுக்கு இடையே பேசி இறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் மொழி போர்கொடி..! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் எழுந்த சர்ச்சை..!

முதல் கட்டமாக பாகிஸ்தானில் இருந்து 50ஆயிரம் டன் அரசி இரு பிரிவுகளாக கப்பல் மூலம் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார கூட்டறவு ஏற்படும், வர்த்தகம் கதவுகள் திறந்து புதிய வழி பிறக்க முதல் கட்ட ஏற்றுமதி உதவியாக இருக்கட்டும் என்று இரு நாட்டு வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, நட்புறவு புதுப்பிப்பது குறித்து செய்தி அனுப்பியதற்கு பாகிஸ்தான் அரசும் சாதகமான பதிலை அனுப்பியதால் முதல் கட்டமாக வர்த்தக உறவு தொடங்குகிறது. நார்த் சவுத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை முனைவர் அமீனா மோசின் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ பாகிஸ்தானுடன் நட்புறவு புதுப்பித்து வர்த்தக உறவு தொடங்குவது முக்கியமான நகர்வு. வங்கதேசம் முன்னேறிச் செல்ல பாகிஸ்தானுடன் உறவு இருப்பது அவசியம்.

நாங்கள் எப்போது பன்முக உறவு வைத்துள்ளோம், குறிப்பாக தற்போது இந்தியாவுடன் சரியான உறவு இல்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி முக்கியமான நகர்வு. பாகிஸ்தானுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டும். 1971ம் ஆண்டு நடந்த சம்பவமும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த சம்பவம் வங்கதேச மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.” எனத் தெரிவித்தார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசினா 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் புரட்சி ஏற்பட்டு, கலவரம் வெடித்து அவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கிருந்து புறப்பட்டு புதுடெல்லியில் அடைக்கலமாகியுள்ளார். அவரை தாகாவுக்கு அனுப்ப வங்கதேச அரசு கேட்டும் இந்தியா அனுப்பவில்லை
இதையும் படிங்க: டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக ரோமில் தரை இறக்கம்..!