தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கூட்டணி குறித்த முடிவை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தி வருகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அந்தக் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது அந்த முடிவு தாமதமடைந்து, கட்சி நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. முதலில், 2024 தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டபோது, தேமுதிகவுக்கு ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதாக பிரேமலதா கூறியுள்ளார். ஆனால், ராஜ்யசபா சீட்டு உடனடியாக வழங்கப்படாமல் 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இபிஎஸ் எங்க தொகுதியில தான் போட்டியிடனும்... அதிமுகவில் 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு...!
இதனால், ஜூன் 2025-இல் பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தி தெரிவித்தார். அதிமுக தரப்பில் கூட்டணி தொடரும் என்று கூறினாலும், தேமுதிக தரப்பில் இது தேர்தல் நோக்கிலான அறிவிப்பு என்று கருதி, கூட்டணி குறித்த இறுதி முடிவை 2026 ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் கட்சி மாநாட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தீவிரம்... கருத்து கேட்கும் செயலியை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!