உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், அமெரிக்க வலதுசாரிகளின் கடும் விமர்சனங்களையும், பங்கு மதிப்பில் பெரும் சரிவையும் எதிர்கொண்டு வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தனது தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் LGBTQ கலாச்சாரத்தை ‘வலிந்து திணிக்கிறது’ என்று வலதுசாரி ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர். 
இந்தச் சூழலில், அமெரிக்காவின் தீவிர வலதுசாரி ஆர்வலரான சார்லி கிர்க் செப்டம்பர் 10, 2025 அன்று உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பேசும்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் இரங்கல் தெரிவித்தபோது, ‘Dead End: Paranormal Park’ என்ற அனிமேஷன் தொடரின் இயக்குநர் ஹாமிஷ் ஸ்டீல், கிர்க்கை ‘நாஜி’ என்று குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது, எக்ஸ் தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
ஹாமிஷ் ஸ்டீல் இயக்கிய ‘Dead End: Paranormal Park’ 2022இல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இந்த அனிமேஷன் தொடர், 7 வயது குழந்தைகளுக்காக விளம்பரப்படுத்தப்பட்டது. இதில், பார்னி என்ற கதாபாத்திரம் தன்னை டிரான்ஸ்ஜெண்டர் என்று வெளிப்படுத்தும் காட்சி உள்ளது, இது LGBTQ கலாச்சாரத்தை ‘வலிந்து திணிப்பதாக’ வலதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டது. 
இதையும் படிங்க: யாரு No.1 பணக்காரர்? எலான் மஸ்க் - லேரி எல்லிசன் போட்டா போட்டி!  தலைசுற்றும் சொத்து மதிப்பு!
இந்தத் தொடர் 2023இல் ரத்து செய்யப்பட்டாலும், ஸ்டீலின் சமீபத்திய கருத்துகள் மற்றும் தொடரின் உள்ளடக்கம் மீண்டும் சர்ச்சையைத் தூண்டியது. எக்ஸ் பயனர் மாட் வான் ஸ்வோல், “சார்லி கிர்க்கின் படுகொலையை கொண்டாடியவரை பணியமர்த்திய நெட்ஃப்ளிக்ஸ், குழந்தைகளுக்கு டிரான்ஸ் உள்ளடக்கத்தை திணிக்கிறது. எனது சந்தாவை ரத்து செய்கிறேன்” என்று பதிவிட்டார். இதை ரீபோஸ்ட் செய்த எலான் மஸ்க், “நானும் ரத்து செய்கிறேன்” என்று எழுதி, “குழந்தைகளின் நலனுக்காக நெட்ஃப்ளிக்ஸை ரத்து செய்யுங்கள்” என்று தொடர்ந்து பதிவிட்டார்.

இதன் விளைவாக, #CancelNetflix ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் உலகளவில் டிரெண்ட் ஆனது. ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் சந்தாக்களை ரத்து செய்த ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்தனர். ‘Cocomelon’, ‘Jurassic World: Camp Cretaceous’ போன்ற பிற நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களிலும் LGBTQ காட்சிகள் உள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். 
இந்த சர்ச்சையால், நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் கடந்த இரு நாட்களில் சுமார் 2.4% சரிந்து, அக்டோபர் 3 அன்று $1,161 ஆக வீழ்ச்சியடைந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் $5.33 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. மஸ்க்கின் பதிவுகளைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் மதிப்பு $507.25 பில்லியனாகக் குறைந்தது, இது கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சியாகும்.
நெட்ஃப்ளிக்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 128% வருமானத்தை அளித்துள்ளது. 2024இல் 61% உயர்ந்து, 2025இல் 30% வளர்ச்சி கண்டது. இருப்பினும், செப்டம்பரில் 4.6% சரிவு ஏற்பட்டது. இந்த சர்ச்சை, மஸ்க்கின் 227 மில்லியன் எக்ஸ் பின்தொடர்பவர்களின் செல்வாக்கால் மேலும் தீவிரமடைந்தது. 
ஸ்டீல், தனது கருத்துகள் “பொய்யும் அவதூறும்” என்று மறுத்து, “நான் கிர்க்கின் மரணத்தைக் கொண்டாடவில்லை” என்று Bluesky தளத்தில் விளக்கினார். அவர், தனக்கு வந்த ஓரினச்சேர்க்கை வெறுப்பு மற்றும் யூத விரோத மின்னஞ்சல்களால் பயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
பொருளாதார நிபுணர்கள், இந்த சரிவு தற்காலிகமானது என்றும், சர்ச்சை ஓய்ந்தவுடன் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் மீட்சி பெறலாம் என்றும் கணிக்கின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் LGBTQ உரிமைகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம் மற்றும் ஊடகப் பொறுப்பு குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் இதுவரை இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடவில்லை.
இதையும் படிங்க: இவன் தான் கொலைக் குற்றவாளி!! சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவன்! FBI அறிவிப்பு!