காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அதன் எதிரொலியாக பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது.

எல்லையில் தினம்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களிடயே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. இதேபோல் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் உள்ள கிழக்கு கடற்படை வீரர்களுடன் கிழக்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்துரையாடல் நடத்தினார்.
இதையும் படிங்க: நாங்க ஒரு தப்பும் பண்ணல.. இந்தியாவை எப்படியாச்சும் தடுத்து நிறுத்துங்க..! தூதர்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

கடற்படை தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து கடற்படை வீரர்களும் விழிப்புடன் இருக்கவும், வளர்ந்து வரும் சவால்களையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கவும் வலியுறுத்தினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த கணமும் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பாகிஸ்தான் உச்சக்கட்ட பீதியில் உள்ளது. பதிலடியை சமாளிக்க எல்லையை உஷார் நிலையில் வைத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அடுத்த 60 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் சவுத்ரி அன்வாருல் ஹக் வெளியிட்ட அறிவிப்பு: எல்லையை ஒட்டி வசிக்கும் மக்கள் அடுத்த 2 மாதத்துக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

நீலம் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையை ஒட்டியுள்ள மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ராணுவ மோதல் ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க வேண்டும் என்பதால், அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்களை இருப்பு வைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். அதே போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் உள்ள மதரசாக்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தான் பயங்கரவாதிகளை வளர்க்கும் முக்கிய இடமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

அங்கு மட்டும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம், பதுங்குமிடங்கள் என 40 முகாம்கள் இருப்பதை நம் உளவுத்துறை மோப்பம் பிடித்தது. அந்த இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் கருதியதால், 40 முகாம்களில் இருந்த பயங்கரவாதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. அதே போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்ற குரல் இந்திய அரசியல் களத்தில் வலுவாக ஒலிக்க ஆரம்பித்ததாலும் இத்தகைய நடவடிக்கையை பாகிஸ்தானும், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசும் எடுத்துள்ளன.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கதேசம்..!