தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகக் காவல்துறையில் நள்ளிரவில் மிகப்பெரிய அளவில் அதிரடிப் பணியிட மாற்றங்களைச் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி முதல் எஸ்பி ரேங்க் வரையிலான மொத்தம் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள் தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி, தாம்பரம், கோவை மற்றும் நெல்லை ஆகிய முக்கிய நகரங்களின் காவல் ஆணையர்களும் மாற்றப்பட்டுப் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகக் காவல்துறையின் உயர் மட்ட அதிகாரப் படிநிலையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து உள்துறைச் செயலாளர் இன்று நள்ளிரவு அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையில் 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாகவும், 7 ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: “அந்த சிவப்பு கோடு இல்லையா? தொடவே வேண்டாம்!” - போலி மருந்துகளை துரத்தும் சுகாதாரத்துறை!
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகப் பணியாற்றிய டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபியாகவும், பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்று அதே பிரிவுகளில் பணியைத் தொடர உள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தமிழகச் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவிக்கு மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகரக் காவல் ஆணையர்கள் மட்டத்தில் நடந்த மாற்றங்களில், தென்மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராகவும், கண்ணன் கோவை காவல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை காவல் ஆணையராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். மத்திய மண்டல ஐஜியாகப் பாலகிருஷ்ணனும், தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிடாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் பல ‘கிடுக்கிப்பிடி’ மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 15 எஸ்பிக்கள் டிஐஜிக்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். சசாங்க் சாய் காஞ்சிபுரம் சரக டிஐஜியாகவும், தேஷ்முக் சேகர் சஞ்சய் ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், அருள் அரசு விழுப்புரம் சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நரேந்திர நாயரும், தலைமையிடக் கூடுதல் ஆணையராக ஜோஷி நிர்மல்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு நிர்வாகச் சக்கரத்தைச் சுழற்ற அரசு எடுத்துள்ள இந்த மாற்றங்கள், தமிழகக் காவல்துறையில் புதிய வேகத்தை உண்டாக்கியுள்ளன.
இதையும் படிங்க: சாராயக் கடைகளை மூடுங்கள்! தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - சௌமியா அன்புமணி விளாசல்!