துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தை தரையில் மோதி நொறுக்கும் சதியை இந்திய விமானி முறியடித்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக நான்கு விமானிகள் சென்றது ஏன் என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானம், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா வான்வெளியில் சென்றபோது திடீரென உயரம் குறைந்து கீழ்நோக்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த விமானம் சவுதி அரேபியாவில் உள்ள தபுக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் விமானிகளுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதும், பயணிகள் காக்பிட்டிற்குள் சென்று தாக்கிய விமானியைப் பிடித்து சார்ஜர் கேபிளால் கட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தின் பின்பகுதியில் இருந்த இரண்டு விமானிகள் உடனடியாக விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 180 உயிர்களை காத்து... ஓவர் நைட்டில் ஹீரோவான இந்திய விமானி... பிரதமர் மோடி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!
இந்நிலையில், வழக்கமாக விமானத்தில் இரண்டு விமானிகள் மட்டுமே செல்லும் நிலையில், கூடுதலாக இரண்டு விமானிகள் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் இருவரும் விமானத்தில் பயணிகளாக சென்றதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் துபாய் விமானத்தின் கூடுதல் விமானிகளாகவே சென்றது தெரியவந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக திடீரென விமானங்கள் அடிக்கடி பாதை மாற்றப்படுவதாலும், வழக்கமான பணி நேரத்தை விட விமானிகள் கூடுதல் நேரம் பணி செய்யக்கூடாது என்ற விதி இருப்பதாலும், இந்தக் கூடுதல் விமானிகள் துபாய் விமானத்தில் அனுப்பப்பட்டிருக்கலாம் என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விமானத்தில் இருந்ததால்தான், மோதலுக்கு நடுவே வேகமாக கீழ்நோக்கி சென்ற விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கி அனைவரையும் காப்பாற்ற முடிந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஓமன் விமானி பயன்படுத்தியது கத்தி அல்ல என்றும், காக்பிட் பகுதியில் தீயணைப்புக் கருவியோடு இருக்கும் சிறிய ரக கோடாரி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுவாக காக்பிட் பகுதியில் வைக்கப்படும் தீயணைப்புக் கருவியும், அது வைக்கப்படும் கண்ணாடிப் பெட்டியை உடைப்பதற்காக உடன் வைக்கப்படும் சிறிய ரக கோடாரியும், அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு கருதி கடந்த 25 ஆண்டுகளாக விமானத்தின் அறையில் வைக்கப்பட்டு வருகிறது.
இப்போது விமானத்திற்குள்ளேயே அந்த பாதுகாப்பு உபகரணங்கள் ஆபத்தான வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?