அமெரிக்காவின் அரசியல் களத்தில் புதிய நட்பின் அடையாளமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 வயது இளம் தலைவர் ஜோஹ்ரான் மம்தானி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பு குறிப்பிடத்தக்கது.
பல மாதங்களாக ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து வந்த இருவரும், இந்த சந்திப்பில் நகரத்தின் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, ஒத்துழைப்புக்கு வழி வகுத்தனர். இந்த சந்திப்பு, தேர்தல் போட்டியின் போது ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வந்து, நியூயார்க்கின் எதிர்காலத்துக்கு நல்ல அறிகுறியாக மாறியுள்ளது.
நியூயார்க் நகர மேயர் தேர்தல் நவம்பர் 4, 2025 அன்று நடந்தது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோஹ்ரான் மம்தானி, 50.4 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவர், நியூயார்க்கின் அரசியல் வரலாற்றில் முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயராகவும், ஒரு நூற்றாண்டுக்கும் மேல் இளையவராகவும் சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: இந்தியா - தென் ஆப்ரிக்கா கலாசார தொடர்பு அழியாதது!! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோவையும், ரிபப்ளிகன் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவையும் வீழ்த்தி வென்ற அவர், டெமாக்ரடிக் சோஷலிஸ்ட் என்ற அடையாளத்துடன் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில், மம்தானி டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். அதே நேரம், டிரம்ப் மம்தானியை 'கம்யூனிஸ்ட்' என்று அழைத்து, அவர் வென்றால் நகரம் 'மோசமாகி' விடும் என்று எச்சரித்தார். இந்த விமர்சங்கள் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தின.
இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பின் மம்தானி வெள்ளை மாளிகையைச் சந்தித்தார். சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், "மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்தது. அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்ய முடியும். எங்களுக்கு ஒரு பொதுவான விஷயம் உள்ளது. இந்த நகரத்திற்காக மிகவும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம். மேயரை வாழ்த்த விரும்பினேன்.

ஆரம்பகால முதன்மைத் தேர்வுகளில் தொடங்கி, பல புத்திசாலி மக்களுக்கு எதிராக அவர் உண்மையிலேயே நம்பமுடியாத பந்தயத்தை நடத்தினார். மேலும் அவர் அவர்களை எளிதாக வென்றார். நான் நினைத்ததை விட நிறைய விஷயங்களில் அவர்கள் உடன்பட்டனர்" என்று கூறினார். இந்த வார்த்தைகள், இருவருக்கும் இடையிலான பழைய விமர்சங்களுக்கு முடிவு கட்டியதாகக் கருதப்படுகிறது.
சந்திப்பில், வாடகை, மளிகைப் பொருட்கள், பயன்பாடுகள், மலிவு விலை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் வீட்டுவசதி போன்ற நகரத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன. இதைப் பற்றி மம்தானி கூறுகையில், "அதிபர் டிரம்ப் உடனான உரையாடலை நான் பாராட்டுகிறேன். நியூயார்க்கர்களுக்கு மலிவு விலையில் அனைத்தும் கிடைக்க இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.
இன்று எங்களுக்கு ஒரு சந்திப்பு நடந்தது, அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனக்கு நியூயார்க் நகரம் மிகவும் பிடிக்கும். இந்த மேயர் பதவியில் உண்மையிலேயே சிறப்பாக இருக்கக்கூடிய சில விஷயங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். இந்த உரையாடல், இரு தலைவர்களும் நகரத்தின் மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஜோஹ்ரான் மம்தானி, உகாந்தாவில் பிறந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தந்தை மஹ்மூத் மம்தானி ஒரு பிரபல அகாடமிக், தாய் மிரா நாயர் பிரபல இயக்குநர். நியூயார்க் நகரம், உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. இதன் மேயராக மம்தானி, வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பது, வீட்டு வசதியை அதிகரிப்பது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும். டிரம்பின் ஆதரவுடன், இந்தப் பணிகள் எளிதாகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மோடி -ஜி ஜின்பிங் சந்திப்பு எதிரொலி!! சீனர்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஆஃபர்!!