உலகளாவிய காலநிலை ஆபத்தில் இருக்கும் நேரத்தில், தொழில்மயமான ஐரோப்பிய கண்டத்தை வெப்ப அலை உலுக்கியெடுத்து வருகிறது. தென்மேற்கு ஐரோப்பாவில் நிலவிய அசாதாரணமான அதிக வெப்பநிலையால், பிரான்சில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் வெப்பத்தின் மையமாக மாறி, கடந்த சில தசாப்தங்களின் சாதனைகளை முறியடித்துள்ளன. வானிலை ஆய்வாளர்கள் இதை ஒரு 'ஒமேகா பிளாக்' நிலைமை என்று விவரிக்கின்றனர்.
பிரெஞ்சு வானிலை ஆய்வு மையத்தின்படி, பல நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. திங்களன்று, போர்டோவில் அதிகபட்சமாக 41.9 டிகிரி செல்சியஸும், போய்ட்டியர்ஸில் 41.2 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது. இது 1947-ல் பதிவான சாதனைகளையும் விஞ்சியுள்ளது. தென்கிழக்கு பிரான்சில், கடும் வெயிலின் காரணமாக ஒரு காருக்குள் வெப்பநிலை உயர்ந்ததால், 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும், போர்டோ பகுதியில் மூன்று முதியவர்கள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தனர். வெப்பத்தைத் தணிப்பதற்காக ஆறுகளிலும் ஏரிகளிலும் நீந்திய பதின்மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பிரான்சில் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை 172 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 'ஒமேகா பிளாக்' என்பது என்ன?
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகளின் கூற்றுப்பட, சகாரா பாலைவனத்திலிருந்து, கிரேக்க எழுத்தான 'ஒமேகா' வடிவத்தில் உருவான ஒரு மாபெரும் வெப்பக் காற்றுக்குமிழி ஐரோப்பாவின் மீது தள்ளப்பட்டது. இது காற்றின் இயக்கத்தை முற்றிலுமாக முடக்கி, கடுமையான வெப்பத்தை ஒரே இடத்தில் குவித்துள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!
பிரிட்டனின் நிலை என்ன?
பிரிட்டனில் ஜூன் மாதத்தில் முதன்முறையாக வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1957 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் பதிவான சாதனைகளை முறியடிக்கும். இதேபோல், ஸ்பெயினில் உள்ள குளிர் காலநிலையைக் கொண்ட நகரமான சான் செபாஸ்டியனில், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இது அங்குள்ள சராசரியை விட இருமடங்கு அதிகமாகும். மேலும், இத்தாலியில் உள்ள 12 முக்கிய நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டுரின் நகரில், குளிரூட்டிகளின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதால், மின்சாரக் கட்டமைப்புக்கு அழுத்தம் ஏற்பட்டு, மின்வெட்டுகள் திணிக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் புவி வெப்பமயமாதலின் அதிகரித்து வரும் தாக்கம், தற்போது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மின் பற்றாக்குறை மற்றும் மோசமடைந்து வரும் உள்கட்டமைப்பைச் சமாளிக்க அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??