வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உதவும் வகையில், இந்தியாவிலிருந்து 5,000 டன் டீசல் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் நுமலிகார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை தாண்டிய 'இந்தியா - வங்கதேச நட்புறவு பைப்லைன்' (IBFPL) வழியாக இந்த விநியோகம் நடைபெறுகிறது.
இந்தியாவுடனான 15 ஆண்டு கால நீண்டகால ஒப்பந்தப்படி, ஆண்டுக்கு 1,80,000 டன் டீசல் வங்கதேசத்திற்கு வழங்கப்பட வேண்டும். தற்போது அனுப்பப்பட்டுள்ள 5,000 டன் டீசல் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே ஆகும் என வங்கதேச பெட்ரோலிய கழகத்தின் (BPC) தலைவர் முகமது ரெஸானூர் ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்தப்படி அடுத்த ஆறு மாதங்களில் மொத்தம் 90,000 டன் டீசல் வங்கதேசத்திற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதில் மாதத்திற்கு 5,000 டன் என்ற அடிப்படையில் விநியோகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!
வங்கதேசத்தில் எரிபொருள் இருப்பு குறைந்துள்ள நிலையில், சில வர்த்தகர்கள் சட்டவிரோதமாக டீசலை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைச் சமாளிக்க வங்கதேச அரசு பல்வேறு சோதனைகளை நடத்தி வரும் சூழலில், இந்தியாவின் இந்த விநியோகம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாட்டின் அதிகரித்து வரும் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பைப்லைன் மூலம் கூடுதலாக 50,000 டன் டீசல் வழங்க வேண்டும் என வங்கதேச நிதியமைச்சர் அமீர் காஸ்ரு மஹ்மூத் சௌத்ரி இந்தியத் தூதரிடம் அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த உதவி வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!