அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை நசுக்கி, ஒட்டுமொத்த வேளாண் தொழிலையும் அழித்துவிடும் என்று ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை இன்று நேரில் சந்தித்துப் கோரிக்கை மனு அளித்தப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய பி.ஆர். பாண்டியன், இது கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமானது என்று சாடினார். இந்த ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது கூட விவசாயிகளுக்குத் தெரியாது. நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இது குறித்து வெளியே கருத்துத் தெரிவிப்பது அபத்தமானது.”
இதையும் படிங்க: "இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!" கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!
பால் மற்றும் விவசாயப் பொருட்கள் இறக்குமதியால் இந்திய விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. பியூஸ் கோயல் எப்போதும் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவாகச் செயல்படுகிறார். எனவே பிரதமர் மோடி அவரை மட்டும் நம்பாமல், விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.”
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் நீதி அரசர் நவாப் சிங் குழு பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 7-ஆம் தேதி முதல் மார்ச் 19-ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் தொடர் பேரணி நடைபெறுகிறது. வரும் மார்ச் 19, 2026 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி போராட்டத்திற்கு முன்னதாக அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்தார். விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், இது தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதாகத் தமக்கு உறுதியளித்துள்ளதாகப் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'புராஜெக்ட் வால்ட்': பாக்.,-ல் 13 பில்லியன் டாலர் முதலீடு..!! அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா..!!