டெஹ்ரான்: ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக நாட்டின் 22 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசுப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக வெடித்துள்ளன. இதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோம் நகரத்தில் ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை நடந்த வன்முறையில் சாலைகளிலும் தெருக்களிலும் தீ வைக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. போராட்டக்காரர்கள் வாகனங்களையும் கடைகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 201 ஊழல் வழக்குகள்!! கையும் களவுமாக சிக்கிய 76 இடைத்தரகர்கள்! கேரளா அதிரடி!
ஈரான் பணமதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 14 லட்சம் ரியால் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைதியான போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது அரசு துப்பாக்கிச்சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு ஈரானின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிபர் மசூத் பெசெஷ்கியன் தலைமையிலான அரசு பொருளாதார நெருக்கடி குறித்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது. ஆனால், பணமதிப்பிழப்பு தொடர்வதால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி காவலில் இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மாபெரும் போராட்டங்களை ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது நினைவுகூரத்தக்கது.
தற்போதைய போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியால் தொடங்கிய போதிலும், அரசுக்கு எதிரான அலை வலுவடைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வன்முறை தொடர்ந்தால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: வேலு நாச்சியார் வழியில் மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடிப்போம்… விஜய் உறுதிமொழி…!