அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். “பகல் கனவு காண்பதை நிறுத்திவிட்டு யதார்த்த உலகை புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்திருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரானுடன் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் அந்நாட்டின் புதிய உச்ச தலைவரை சந்திக்க தயார் என கூறியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு உருவானால் அந்த சந்திப்பை பெருமையாக கருதுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அந்த வாய்ப்பை நேரடியாக நிராகரித்துள்ளார். அமெரிக்க தரப்பில் இருந்து வெளியாகும் தகவல்களை பார்த்தால், யதார்த்த நிலையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றார். இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை எந்த முக்கிய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மத்தியஸ்தர்கள் வாயிலாக மட்டுமே தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: நான் இல்லையினா இஸ்ரேல்னு ஒருநாடே இருந்திருக்காது! ஒபாமா செஞ்சதை நான் மாத்தினேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!

மேலும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாதது குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாகவே அவர் பொதுமக்கள் முன்னிலையில் வரவில்லை என்றும், நாட்டின் முக்கிய முடிவுகளை தொடர்ந்து அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. ஈரான் ஏவியதாக கூறப்படும் நான்கு அதிநவீன தற்கொலைப்படை ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானின் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், உலக நாடுகளும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அமெரிக்கா – ஈரான் உறவு எந்த திசையில் செல்லும் என்பது குறித்து சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது
இதையும் படிங்க: வெயிட்டை குறைங்க முதல்ல!! 108 கிலோ ரொம்ப தப்புங்க! அதிபர் ட்ரம்பிற்க்கு டாக்டர்கள் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!