காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி தாக்கியது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த ஆப்ரேஷனில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உலக நாடுகளிடம் இருந்து ஆதரவு பெருகுகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்தியாவுடன் நாங்கள் துணை நிற்போம் என்று இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் கூறியது: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் இந்தியாவுடன் நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம். இது தான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு. பஹல்காம் தாக்குதலுக்கும் 2023 அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமை உண்டு. சூழல் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் படுகொலை நடந்த விதம் ஒன்றே.
இதையும் படிங்க: உணவுக்காக கையேந்தும் நிலைமை..! பசி, பட்டினியால் தவிக்கும் காஸா மக்கள்..!

இந்தியாவை போலவே இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. ஜிகாதி பயங்கரவாத மனநிலையுடன், அப்பாவி மக்களை குறிவைக்கும் பயங்கரவாதத்தை ஆழமாக புரிந்து கொண்டவர்கள் நாங்கள். எனவே இந்தியர்களை பயங்கரவாதிகள் குறி வைக்கும் போது, இந்தியாவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இஸ்ரேல் அறியும். இஸ்ரேல் இந்தியாவுக்கு துணை நிற்கும். இதற்கு முன்பும் இதை செய்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இதை தான் செய்வோம் என்று ஓரன் கூறினார்.

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கூடி இருந்த இடத்தில் எப்படி குருவி சுடுவது போல் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினரோ, அதை மாதிரி தான் 2023 அக்டோபரில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் வெறியாட்டம் நடத்தினர்.யூதர்களின் பண்டிகை நாளான அன்று பல இடங்களில் இசை கச்சேரி நடந்தது. அங்கு ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒரே இடத்தில் 1250 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தான் பஹல்காம் அட்டாக்குடன் இஸ்ரேல் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஒப்பிட்டார்.

இது பற்றி மேற்கு மற்றும் மத்திய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோப்பி ஷோஷானி கூறியது: இந்தியாவுக்கு தன்னை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தற்காப்புக்காக இந்தியா நடத்திய தாக்குதல் எங்களை பெருமைப்பட வைத்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் உலகின் எல்லா நாடுகளுக்கும் வலுவான செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது. பதிலடி மூலம் பயங்கரவாதிகளுக்கும் இந்தியா செய்தி சொல்லி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு மோடி சூட்டிய பெயர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. ஆப்ரேஷன் சிந்தூர் என்று மிகச்சரியான, பொருத்தமான பெயரை அவர் வைத்துள்ளார். அந்த பெயர் என் இதயத்தை தொட்டு விட்டது என்று ஷோஷானி கூறினார்.

ஹவுதி பயங்கரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்ததை சுட்டிக்காட்டியும் ஷோஷானி பேசினார். உலகின் எந்த நாடுகளும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளக்கூடாது. பயங்கரவாதிகள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். எந்த தாக்குதலுக்கும் பதிலடி நிச்சயம் உண்டு. நாங்கள் ஒரு போதும் எங்கள் நிலத்தில் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.
இந்த நிலையில் இந்தியா தங்களது நண்பன் என்றும், பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் இஸ்ரேல் பெண் கமாண்டோக்களும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுமட்டும் அல்ல, நம் காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் பயங்கரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கூட்டம் போட்டனர். அந்த கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹமாஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டினியில் பாலஸ்தீனியர்கள்: காஸாவுக்குள் உணவுப்பொருட்களை விடாமல் மறித்த இஸ்ரேல்..!