ஜப்பானில் நடந்த சமீபத்திய பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான இந்தக் கூட்டணி, 465 இடங்களுக்கான தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 233 இடங்கள் போதுமான நிலையில், இந்த மிகப்பெரிய பெரும்பான்மை ஜப்பான் அரசியலில் வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராக பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தைக் கலைத்து பிப்ரவரி 8-ஆம் தேதி ஸ்னாப் தேர்தலை அறிவித்தார்.
இதையும் படிங்க: சனே தகைச்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி வெற்றி! ஜப்பான் வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்!
இந்த துணிச்சலான முடிவு அவருக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளது. இதன்மூலம் கீழவை மட்டுமின்றி மேலவையிலும் முழு கட்டுப்பாட்டை LDP கூட்டணி பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களையும் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் இப்போது சனே தகாய்ச்சியிடம் உள்ளது.
இந்த வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் சிறப்பான தலைமையின் கீழ் இந்தியா-ஜப்பான் உறவுகளை மேலும் உயர்த்துவோம்” என்று கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனே தகாய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், “ஜப்பானின் அமோக வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். மிகவும் மதிக்கத்தக்க தலைவர் தகாய்ச்சி. முன்கூட்டிய தேர்தல் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுபோன்ற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வெற்றி முதல்முறை. உங்களையும் உங்கள் கூட்டணியையும் ஆதரிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து சனே தகாய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். “வெள்ளை மாளிகைக்குச் செல்வதையும், ஜப்பான்-அமெரிக்கக் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆழமான நம்பிக்கையும் வலுவான ஒத்துழைப்பும் கொண்ட இந்த உறவு வரம்பற்ற சக்தி கொண்டது. அமைதியையும் செழிப்பையும் நிலைநிறுத்த இணைந்து செயல்படுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி ஜப்பானின் பொருளாதார சீர்திருத்தங்கள், பாதுகாப்பு கொள்கைகள், சீனாவுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு மக்கள் ஆதரவு அளித்ததாக விளக்கப்படுகிறது. சனே தகாய்ச்சியின் தலைமையில் ஜப்பான் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சனே தகைச்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி வெற்றி! ஜப்பான் வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்!