காஷ்மீரின் அழகிய பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூர் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கியது.
போரில் இறங்கிய பாகிஸ்தான் விமானப்படை தளங்களும் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பயங்கரவாத அமைப்புகள் புதிய சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த மாதம் ஒரு ரகசிய உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISIயின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய இலக்குகளைத் தாக்க வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: இரண்டு பக்கமும் போர்!! நெருக்கடியில் பாக்., எங்களை சிக்க வைக்க பார்க்கிறது இந்தியா! புலம்பும் கவாஜா!

இதையடுத்து, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கள் ஆதரவாளர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக குளிர்காலத்தில் எல்லைத் தாண்டிய ஊடுருவல் சம்பவங்கள் குறைவாக இருக்கும். ஆனால் இம்முறை பயங்கரவாதிகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் முழு உஷாருடன் கண்காணித்து வருகின்றனர்.
உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவம் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து வருகிறது. காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ராணுவம் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த துருக்கி! ஆபரேசன் சிந்தூர் காயத்தை திருப்பி கொடுத்த இந்தியா!