ஜப்பான் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 8, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் நிகழ்வால் மக்கள் மத்தியில் கடும் பீதி நிலவுகிறது.
ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் (JMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 (சில தகவல்களின்படி 7.5) அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் பெரும்பாலும் ஜப்பான் நாட்டின் ஹோன்சு கடற்பகுதிக்கு அருகில், ஆழமான பகுதியில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரைப் பகுதிகளை ஒட்டி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பானுக்கு யாரும் போகாதீங்க..!! சீன அரசு வார்னிங்..!! காரணம் இதுதான்..!!
நிலநடுக்கத்தின் காரணமாகக் கடலில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக, அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையின்படி, கடற்கரைப் பகுதிகளில் சுமார் 10 அடி (3 மீட்டர்) உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹொக்கைடோ, அமோரி, இவாடே உள்ளிட்ட ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை காரணமாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது. சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
இதையும் படிங்க: புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை