வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸையும் அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெனிசுலா தலைநகர் கராகஸ் நகர வீதிகள் போராட்டக் களமாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான மதுரோ ஆதரவாளர்கள் திரண்டு அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டித்து உரத்த கோஷங்களை எழுப்பினர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதை பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலை அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி மதுரோ தம்பதிகளை கைது செய்தன.
இந்தச் செய்தி வெளியான உடனேயே மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குரேரா சமூக வலைதளங்கள் வாயிலாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று கராகஸ் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கினர்.
இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோங்க! இல்லையினா?! வெனிசுலாவை தாக்கிய அமெரிக்கா! கொந்தளிக்கும் சீனா!
போராட்டக்காரர்கள் மதுரோவையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அமெரிக்காவின் இந்தத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்த அவர்கள், வெனிசுலாவின் இறையாண்மையை மீறிய செயல் இது என்று குற்றம் சாட்டினர்.

போராட்டம் காரணமாக கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்புப் படையினர் போராட்டத்தை கலைக்க முயன்ற போதும் ஆதரவாளர்கள் திரண்டு நின்றனர்.
மதுரோவின் மகன் மதுரோ குரேரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆடியோ செய்தியில் காட்டமாக பேசியுள்ளார். ஆளும் இயக்கத்திற்குள் துரோகம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும், வரலாறு துரோகிகளை அம்பலப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
துரோகிகள் யார் என்பதை வரலாறு சொல்லும் என்று கூறிய அவர், மக்கள் அதைப் பார்ப்போம் என்று தெரிவித்தார். இந்தக் கருத்து ஆதரவாளர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரோ ஆட்சியை ஆதரிக்கும் சோஷலிசக் கட்சியினரும் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வெனிசுலா மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் இந்தக் கைது நடவடிக்கையை கண்டித்து வரும் நிலையில், வெனிசுலாவில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் லத்தீன் அமெரிக்காவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெனிசுலாவை தாக்க போதைப்பொருள் காரணமில்லை! அமெரிக்காவின் சீக்ரெட் ப்ளான்!! கொட்டிக்கிடக்கும் வளம்!