பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதால் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மனநல பாதிப்புகள் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக சுமார் ரூ.5,404 கோடியை வழங்க வேண்டும் என்று நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட ஆபத்துகளை கட்டுப்படுத்துவதில் மெட்டா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மெட்டா நிறுவனத்திற்கு சுமார் ரூ.3,574 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை ஈர்க்கும் வகையில் செயல்படுவதாகவும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான தகவல்களை நிறுவனம் மறைத்ததாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

இந்த நிலையில், வழக்கின் இரண்டாம் கட்ட தீர்ப்பு ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியானது. இதில், சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடாக சுமார் ரூ.5,404 கோடியை மெட்டா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையில் சுமார் ரூ.4,000 கோடி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் ஆதரவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மனநலப் பிரச்சினைகள் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விவாதம் உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களது தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்கிறார்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பதின்ம வயதினரை பாதுகாப்பதற்காக தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் முழு நம்பிக்கை இருப்பதாகவும் மெட்டா கூறியுள்ளது.
குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராக இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்! மெட்டா குழுவை நேரில் அழைத்த மத்திய அரசு!