ஈரான் மீதான போர் தொடரும் நிலையில், உலக எண்ணெய் விநியோகத்துக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப் பாதை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் அசலூயே எரிவாயு வளாகம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக நெதன்யாகு தெரிவித்தார். மேலும், ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் அணுசக்தி தொடர்பான உள்கட்டமைப்புகள் பெருமளவு அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நெதன்யாகு கூறியதாவது: “ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக, அரேபியத் தீபகற்பம் வழியாக இஸ்ரேலின் மத்தியதரைக் கடல் துறைமுகத்துக்கு நேரடி குழாய் அமைக்கலாம். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்பாக விநியோகம் செய்ய முடியும். இது நிச்சயம் சாத்தியமான திட்டம்” என்றார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமருக்கு என்னாச்சு! தீயாய் பரவிய வதந்தி! ஒரே வீடியோவில் முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 20 நாட்களாக நடத்திய கூட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் திறன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன் முடக்கப்பட்டுவிட்டதாக நெதன்யாகு தெரிவித்தார்.
“மக்கள் நினைப்பதை விட இந்தப் போர் மிக வேகமாக முடிவுக்கு வரும். ஈரான் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதையும், அணு ஆயுதங்களை அமெரிக்காவுக்கு எதிராக ஏவும் அபாயத்தையும் தடுப்பதில் டிரம்ப் முழுமையாக உடன்பாடு கொண்டுள்ளார். இந்தப் பேரழிவைத் தடுக்க நமது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை மட்டுமே ஒரே வழி” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூலம் உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறுவதால், தொடரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வு உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் நெதன்யாகு முன்வைத்துள்ள மாற்றுப் பாதைத் திட்டம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நெதன்யாகுவை கொலை செய்ததா ஈரான்?.. மரண பதிலடி கொடுத்த இஸ்ரேல்... அதிவேகமாக பரவும் வீடியோ...!