பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் ராணுவம் பதிலடி கொடுத்தது. நம் படையை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கியதால் போர் நிறுத்தம் உருவானது. இப்போது ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை எடுத்த காரணம் குறித்தும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தற்போது ஏழு குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. 59 தலைவர்கள் 32 நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். குழு 1-ல் பா.ஜ., எம்.பி., பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு செல்லும் நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்.. அசோகா பல்கலை. பேராசிரிசியர் அதிரடி கைது..!
அதன்படி, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு குழு செல்கிறது. அதேபோல், குழு 2-ல் பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பா, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. குழு-3-ல் ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு, இந்தோனேசியா, மலேசியா, கொரிய குடியரசு, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.

குழு-4-ல் சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. குழு-5-ல் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.
குழு-6-ல் தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. குழு-7-ல் தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.

இந்த நிலையில் இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும் வெளிநாடு செல்லும் குழு அமைத்துள்ளது. தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக, இந்தியாவை போலவே பாகிஸ்தானும் வெளிநாடு செல்லும் குழு அமைத்து உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் அமைதிக்கான வாதத்தை முன்வைக்கவும் ஒரு குழுவை வழிநடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கேட்டுக் கொண்டார். இந்தப் பொறுப்பை ஏற்று, சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் நான் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். இந்தக் குழுவில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்கள் தஸ்கீர் கான், ரபானி கார், ஜலீல் அப்பாஸ் ஜிலானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு தகவலா? குற்றம்சாட்டும் ராகுல் காந்தி.. வெளியுறவுத்துறை விளக்கம்..!