பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை நம் ராணுவம் குண்டு வீசி தகர்த்தது. பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் போர் நிறுத்த பேச்சுக்கு அழைப்பு விடுத்ததால் இந்தியாவும் சண்டையை நிறுத்தியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா என்ன செய்தது என்பதையும், பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானின் உண்மை முகத்தையும் உலக நாடுகளிடம் அம்பலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுக்களை அமைத்து, பல நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறது. டில்லியில் இருந்து புறப்படும் முன்பு, இது தொடர்பாக பரபரப்பு வீடியோ ஒன்றை சசி தரூர் வெளியிட்டார்.

நாட்டுக்காக பேசுவது தான் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். பயங்கரவாதிகளால் கொடூரமாக இந்தியா தாக்கப்பட்டது பற்றியும், அதனால் ஏற்பட்ட நெருக்கடி பற்றியும் மற்ற நாடுகளிடம் பேசுவோம். நாம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது பற்றி உறுதியாக எடுத்து சொல்ல வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு போதும் இந்தியா அமைதியாக இருக்காது என்பதையும் இந்த விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம் என்பதையும் உலகுக்கு சொல்ல வேண்டும்.உண்மையை உரக்க சொல்வதில் எந்த அலட்சியமும் கூடாது. இது அமைதிக்கான மிஷன். நம்பிக்கைக்கான ஏற்பாடு.
இதையும் படிங்க: ட்ரம்ப் சொல்லுறது பொய்.. சண்டையை நிறுத்த கூறி பாக்., கெஞ்சியதாக ரஷ்யாவில் கனிமொழி THUG கமெண்ட்..!

உலகில் வெறுப்பு பரவுவதையும், மக்கள் கொல்லப்படுவதையும் ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது; மாறாக, சுதந்திரம், ஜனநாயகம், அமைதியை பாதுகாக்க அனைத்து வகையிலும் இந்தியா உறுதியாக நிற்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தக்கூடிய பயணம் இது என்று சசிதரூர் சொன்னார்.
இந்த நிலையில் சசி தரூர் தலைமையிலான எம்.பிக்கள் குழு இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் சென்று சேர்ந்தது. அங்கு அவர் அளித்த பேட்டியில் இந்தியர்கள் உள்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, நாங்கள் இணைந்து வந்துள்ளோம். உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள, நாம் ஒன்றாக போராட வேண்டிய விசயம் இதுவாகும்.
சிலர் காஷ்மீரில் காணப்படும் இயல்புநிலை மற்றும் காஷ்மீர் மக்களின் வளங்களை சேதப்படுத்தும் நோக்கத்துடன், தாக்குதல் நடத்த விரும்பியுள்ளனர். தவிரவும், அராஜகத்துடன் அவர்கள் செயல்பட்டு உள்ளனர். அதுவும் மக்களின் மதம் என்னவென விசாரித்து, அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் அவர்களை கொலை செய்து உள்ளனர்.

இது தெளிவாக இந்தியாவின் பிற பகுதியில் எதிர்விளைவை தூண்டி விட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் இந்துக்களாக உள்ளனர். இதில் ஒரு கீழ்த்தர நோக்கம் உள்ளது என்ற செய்தி தெளிவாக உள்ளது. அது எந்த இடத்தில் இருந்து வந்தது என்பதில், வருத்தத்திற்குரிய வகையில், இந்தியாவுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த தாக்குதல் நடந்து ஒரு மணிநேரத்தில் ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. அது தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் இணைந்த முன்னணி அமைப்பு என்பது சில ஆண்டுகளாகவே தெரிந்த விசயம். அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது.
ஐ.நா. கமிட்டியின் தடை செய்யப்பட்ட குழுவிலும் அது உள்ளது. 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. கமிட்டிக்கு சென்று இந்தியா தகவல்களை அளித்தது. 2025-ம் ஆண்டில் அது தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் வழக்கம்போல் அதனை மறுத்து வருகிறது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நான் அரசுக்காக வேலை செய்யவில்லை. நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்பவன். இது பதிலடி தருவதற்கான சரியான நேரம். அதனை இந்தியா சரியாக செய்தது. துல்லியத்துடன் நடந்த பதிலடியானது, 9 பயங்கரவாத இலக்குகளை, அதன் தலைமையகங்களை மற்றும் ஏவுதளங்களை குறி வைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக எந்தவித குற்ற விசாரணையோ, தீர்ப்போ இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழிக்கும் எந்த முயற்சியும் இல்லை. பதிலாக, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை செய்ததற்காக, பாகிஸ்தான் எதிர்விளைவை பெற போகிறது. நாங்கள் அதற்காக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, துல்லியத்துடன் பதில் தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாக்., முகத்திரையை கிழித்து எறியுங்கள்.. ஜப்பானில் இந்திய எம்.பிக்கள் குழு ஆவேசம்..!