பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கானா நாட்டுக்கான பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த பயணம் ஆனது, இரு நாடுகளின் உட்கட்டமைப்பு, மருந்து பொருட்கள், வளர்ச்சி திட்டங்கள், விளையாட்டு, கல்வி, கலாசார பரிமாற்ற திட்டங்கள் மற்றும் தூதரக பயிற்சி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது.
பிரதமர் மோடி மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ பிரதமர் கல்லா பெர்சாத்- பிஸ்ஸேசர் இருவரும் சந்தித்து பேசி கொண்டனர். இதன்பின்னர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய, தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டுபாகோ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர்கள் இருவரின் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினர் தலைமையிலான பேச்சுவார்த்தை நடந்தது.

இதன் முடிவில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. கானா, டிரினிடாட்- அண்டு டபேகோ குடியரசு பயணத்தை தொடர்ந்து இன்று அர்ஜென்டினா புறப்பட்டார். இது மோடியின் இரண்டாவது அர்ஜென்டினா பயணமாகும். இதற்கு முன் 2018ல் அங்கு போனார். தற்போது தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு Buenos Aires விமான நிலையத்தில் அந்நாடு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..
அர்ஜென்டினா அரசால் வழங்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்புடன் கூடிய ராணுவ மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்தார். தலைநகர் Buenos Airesல் குழுமியிருந்த அர்ஜென்டினா வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பலர் மோடிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும், மோடியிடம் ஆட்டோகிராப் பெற்றும் மகிழ்ந்தனர். பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என பலவாறு கோஷங்கள் எழுப்பி அங்குள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மோடியை வரவேற்றனர்.
தொலைவு ஒரு விஷயம் அல்ல. பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும், இந்தியர் என்ற உணர்வு நம் மக்கள் மனங்களில் வெளிச்சத்துடன் பிரகாசித்ததை காண முடிந்தது. அர்ஜென்டினாவில் இந்தியர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை Javier Milei சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இருவரும் இந்தியா - அர்ஜென்டினாவின் உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளோம் எனவும் பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார்.

லித்தியம், காப்பர், இயற்கை எரிவாயு என பல வகை கனிம வளங்கள், எரிசக்திக்கு தேவையான அம்சங்கள் நிறைந்த அர்ஜென்டினாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான மோடியின் முயற்சி, இந்தியாவின் எதிர்கால எரிசக்தி துறை வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் குளோபல் சவுத் நாடுகளின் வளர்ச்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய உரையாற்ற உள்ள மோடி, உலகின் தெற்கு நாடுகளை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக உலக அரசியலில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: ஷேக் ஹசினாவை தொடரும் சிக்கல்! சிறைவாசம்..! நாடு கடத்த தீவிரம் காட்டும் வங்கதேசம்.!