சீனாவின் தியான்ஜின் நகரில் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மாநாட்டில் பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தியான்ஜின் பிரகடனம் வெளியிடப்பட்டு, அடுத்த பத்தாண்டு SCO வளர்ச்சி உத்தி அங்கீகரிக்கப்பட்டது. மேலும், "உலக பாசிச எதிர்ப்பு போரின்" 80வது வெற்றி ஆண்டு மற்றும் ஐநா-வின் 80வது நிறுவன ஆண்டு நினைவு அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.
இதையும் படிங்க: சீனாவில் லேண்ட் ஆன பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியை கண்டு ரசிப்பு..!!
பிரதமர் மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்று, ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள், குறிப்பாக "சியாவோ ஹீ" என்ற மனித உருவ ரோபோ, பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டு கவனம் ஈர்த்தது. இது வரவேற்பு மற்றும் வரிசைப்படுத்தல் பணிகளை மேற்கொண்டது. 2015இல் தியான்ஜின் துறைமுகத்தில் நடந்த விபத்திற்குப் பின், இந்த மாநாடு நகரின் மறுபிரவேசத்தை உலகிற்கு உணர்த்துகிறது. SCO-வின் "ஷாங்காய் உணர்வு" கொள்கைகளான பரஸ்பர நம்பிக்கை, சமத்துவம், மற்றும் பொது வளர்ச்சி மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு, அமெரிக்காவின் பொருளாதார வரி விதிப்பு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா-ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இந்த உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் புதின் இருதரப்பு உறவுகள், பயங்கரவாத எதிர்ப்பு, நியாயமான வர்த்தகம் மற்றும் பிராந்திய-உலகளாவிய சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இரு தலைவர்களும் கசானில் 2024 இல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வரவேற்றனர். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் புதினுடனான சந்திப்பு குறித்து, “புதினை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி” என பதிவிட்டு, இரு நாடுகளின் நட்பை வலியுறுத்தினார். இந்த சந்திப்பில், மோடி, புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக கைகோர்த்து புகைப்படம் எடுத்தது உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இது அமெரிக்காவின் வரி அழுத்தங்களுக்கு எதிராக மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சாத்தியத்தை உணர்த்தியது.

இந்த மாநாட்டில், இந்தியா SCO உறுப்பு நாடுகளுடன் புதுமை, சுகாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டதாக மோடி தெரிவித்தார். இந்தியா-ரஷ்யா உறவு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் மோடி!! தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு!! ராகுல் காந்தியின் யாத்திரை வீண்!?