மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும், காசாவின் எதிர்காலத்தை மறுகட்டமைப்பு செய்யவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவாக்கியுள்ள வலிமைமிக்க "அமைதி வாரியத்தில்" உறுப்பினராக இணைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி '20 அம்ச' அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, காசாவின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிட "அமைதி வாரியம்" என்ற புதிய சர்வதேச அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்த வலிமைமிக்க அமைப்பில் இந்தியாவை ஒரு முக்கியப் பங்காளராகச் சேர்க்க விரும்பி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அழைப்புக் கடிதத்தை அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.

டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜாரட் குஷ்னர் மற்றும் உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா போன்ற தலைவர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். காசாவில் ஹமாஸ் ஆட்சிக்கு மாற்றாக, அரசியல் சார்பற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஒரு தற்காலிக பாலஸ்தீனக் குழுவை உருவாக்கி, அங்கு முதலீடுகளைத் திரட்டுவது இந்த வாரியத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். இருப்பினும், இந்த வாரியத்தில் இணையும் நாடுகள் சுமார் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “வெனிசுலா இனி அமெரிக்கத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்!” டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
தற்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக வரி தொடர்பான சில மோதல்கள் நிலவி வரும் வேளையில், இந்தியாவிற்கு இத்தகைய ஒரு கௌரவமான சர்வதேசப் பொறுப்பை டிரம்ப் வழங்க முன்வந்திருப்பது அரசியல் நோக்கர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர கனடா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த அழைப்பை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கு இணையாக, அமெரிக்காவின் முழுமையான தலைமையில் உருவாகியுள்ள இந்த வாரியம், மத்திய கிழக்கின் அரசியலில் ஒரு மாபெரும் மாற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், உலக அமைதி முயற்சிகளில் இந்தியாவின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதை இந்த அழைப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிரீன்லாந்து ஆசை அழிவுக்கு வழிவகுக்கும்! டிரம்பிற்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பகிரங்க எச்சரிக்கை!