பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல், பாக்., ராணுவத்தின் அத்துமீறல் என கடந்த சில தினங்களாக ஜம்மு - காஷ்மீர் முழுதும் பதற்றம் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது பல இடங்களில் அமைதி திரும்பியுள்ளது. அக்னுார், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதால், சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு, நேற்று முதல் ஹெலிகாப்டர் சேவை துவங்கியதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.அதே சமயம் ரஜோரியில் பாக்., படைகள் வீசிய பல குண்டுகள் வெடிக்காமல் கிடப்பதால், அவற்றை கண்டறிந்து செயல் இழக்கச் செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவந்திபுராவின் சில பகுதிகளில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் களம் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்..! முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கும் ராஜ்நாத் சிங்..!

காலை முதல் நடந்து வரும் வேட்டையின் போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட நதிர் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், 2வது நாளாக நீடித்து வரும் இந்த மோதலின் போது, மேலும் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதே போல் இந்தியா - மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு ராணுவ கிழக்கு கமாண்ட் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ், அசாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, இந்தியா- மியான்மர் எல்லையில் பகுதியில், மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தின் நியூ சம்டால் கிராமம் அருகே பயங்கரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், இந்தியா - பாக்., எல்லையில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில், பாக்., ராணுவ தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில், நம் ராணுவத்தின் ரோமியோ படைப்பிரிவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாக்., ராணுவ தாக்குதலில் கடும் பாதிப்பை சந்தித்த வீடுகளில் வசிப்போருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருந்துப் பொருட்களும், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களையும் வழங்கி வருகின்றனர். ராணுவத்தின் இந்த செயலை பூஞ்ச் பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். தங்களுக்கு உதவும் ராணுவத்திற்கு பக்க பலமாக இருப்பதாகவும் உறுதி அளித்தனர்.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டில்லியில் இருந்து காஷ்மீர் புறப்பட்டு சென்றார். அங்குள்ள அதிகாரிகள், மக்களை சந்திக்கும் ராஜ்நாத் சிங், காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!