இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று சீனா அறிவித்த நிலையில், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில் அனைத்து வகையான ஆதரவையும் ரஷ்யா வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இறங்கி தீவிரவாதிகளின் முகாம்களையும், தீவிரவாதிகளையும் அழித்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்தியாவின் எல்லைப்புற மாவட்டங்களில் ஏவி தாக்குதல் நடத்தியது. ஆனால் அதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து, அதன் விமானத் தளங்களை தாக்கிஅழித்தது.
இதையும் படிங்க: வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தத்தின் உதவியால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியது. இரு நாடுகளும் எல்லையில் தாக்குதல் ஏதும்நடத்தவில்லை. இந்நிலையில், இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறுகையில் “ பாகிஸ்தான் தன்னுடைய இறையாண்மை, எல்லைப்புற ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கும் முயற்சியில் சீனா ஆதரவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளித்துள்ள நிலையில் இந்தியாவின் தீவிரவாத ஒழிப்பு நிலைப்பாட்டுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது. நாசி ஜெர்மனியை வீழ்த்திய சோவியத் யூனியனின் 80-வது ஆண்டுவிழாவுக்கு இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் சென்றுள்ளார். ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜெனரல் அலெக்சாண்டர் போமினை, மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் இன்று சந்தித்துப் பேசி, போர்நிலவரம், சண்டைநிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டர், “தீவிரவாதத்துக்கு எதிரான அனைத்து வகையான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஆதரவாக இருப்பதாக உறுதியளித்தார். ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தத்தின்படி, தொடர்ந்து இரு நாடுகளும் கூட்டுறவுடன் செயல்படும் அலெக்சாண்டர் தெரிவித்ததாக அமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு இந்தியா வழங்கிய ராணுவ தளவாடங்கள் விரைவில் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இந்தசந்திப்பில் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த ரஷ்யாவுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டருக்கு, ஒரு படைவீரரின் உருவ பொம்மையை இந்தியா சார்பில் அமைச்சர் சஞ்சய் வழங்கினார்.
அப்போது அமைச்சர் சஞ்சய் சேத் நிருபர்களிடம் கூறுகையில் “ரஷ்யாவில் குளிர்ச்சியான வானிலை போல், இந்தியாவுடனான நட்பும் வலுவாக இருக்கும். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் பணிவான குணம் தன்னைமிகவும் ஈர்த்தது. 3முறை அதிபர் புதினை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை அன்புடன் வரவேற்று, பேசியதும், பணிவுடன் நடந்ததும் என்னை ஈர்த்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!