சவுதி அரேபியாவில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு இந்திய தூதரகம் முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக யேமன் நாட்டைச் சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் வசதிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர். இதில் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அக்டோபர் 10 ஆம் தேதி ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் உயிரிழந்தார்.
மேலும் பல இந்தியர்கள் காயமடைந்தனர். பின்னர் தம்மாம் விமான நிலையம் மீதான தாக்குதலிலும் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டாவுக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. உம்ரா பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கும் இதனால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் சவுதி அரசாங்கத்தின் சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான காட்சிகளைப் படம் பிடிப்பதையோ, அவை விழுந்த இடங்கள் குறித்த தகவல்களைப் பகிர்வதையோ தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சட்ட விரோதமானவை என்றும், அதில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சோலி முடிஞ்சது".! ரயில்களில் சத்தமாக பாட்டுக் கேட்டால் ஜெயில்..! தெற்கு ரயில்வே வார்னிங்.!!
இந்த அறிவிப்பைப் பகிர்ந்து இந்திய தூதரகம் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களை உள்ளூர் விதிமுறைகளையும் சட்டங்களையும் மதித்துச் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளது. வான்வழித் தாக்குதல் நடைபெறும்போது வெளியே நிற்காமல் உடனடியாக கட்டிடத்திற்குள் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும், ஜன்னல்களுக்கு அருகில் நிற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் காட்சிகளை வீடியோவாகவோ புகைப்படமாகவோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர முயற்சிக்க வேண்டாம் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் கனமழை... கொடைக்கானலில் நேர்ந்த பயங்கரம்... தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க மக்களே...!!