துபாய்: ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானியால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது காக்பிட்டுக்குள் நடந்த திகில் சம்பவங்களை இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி உரையாடலில் விவரித்துள்ளார். அவரது விளக்கம் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற FZ1073 விமானத்தில் செப்டம்பர் 30-ம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். விமானம் சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி பிரார்த்தனை செய்ய விரும்புவதாக கூறியதாக மச்சார் தெரிவித்துள்ளார்.
அவர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்ததால், மரியாதை கருதி தான் முன்பக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததாக மச்சார் கூறியுள்ளார். சுமார் 4 அல்லது 5 நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென தனது தலையின் பின்புறத்தில் பலத்த அடி விழுந்ததாகவும், முதலில் விமானத்தில்தான் ஏதோ மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டுவிட்டதாக நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு மோடியுடன் நீங்களும் வர வேண்டும்! இந்திய விமானி ஸ்மித்துக்கு நெதன்யாகு அழைப்பு!
ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடந்தபோதுதான், விமானத்தில் பிரச்சினை இல்லை என்றும், தன்னுடன் காக்பிட்டில் இருந்த துணை விமானிதான் தாக்குதல் நடத்துகிறார் என்றும் உணர்ந்ததாக மச்சார் கூறினார். காயம் காரணமாக தனது பார்வை மங்கிய நிலையில், அவரைத் தடுக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் விமானம் திடீரென வேகமாக கீழ்நோக்கி இறங்கியதை உணர்ந்ததாகவும், வெளியே இருந்தவர்கள் காக்பிட் கதவை குறியீடு மூலம் திறக்க முயன்றதாகவும் அவர் கூறினார். ஆனால் துணை விமானி அதைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தரையில் விழுந்திருந்தபோதும், விமானம் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த மச்சார், தன்னிடம் இருந்த கடைசி சக்தியை பயன்படுத்தி காக்பிட் கதவை திறந்ததாக கூறினார். கதவு திறந்ததும் வெளியே காத்திருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே நுழைந்து தாக்குதலை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துணை விமானி காக்பிட்டில் இருந்த அவசரகால கோடாரியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஸ்மிட் மச்சாரின் தைரியத்தை பாராட்டிய நெதன்யாகு, அவரை இந்தியா, இஸ்ரேல் மட்டுமின்றி உலகின் உண்மையான ஹீரோ என்றும் பாராட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் தனது உயிரை பணயம் வைத்து காக்பிட் கதவை திறந்த மச்சாரின் செயலால் 174 பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டதாக பாராட்டு குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் துணை விமானி யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! பகீர் பின்னணி!