மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி ஹொசைனி காமேனி (Ayatollah Ali Khamenei) கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய அரசு மௌனம் காப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதலில் காமேனி உயிரிழந்தார். இதற்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பிராந்தியம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான தலையங்கத்தில் மோடி அரசின் மௌனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!
"ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகும் செயல். இது நடுநிலை அல்ல, பொறுப்பு துறப்பு (abdication)" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி தனது கட்டுரையில், "ஒரு நாட்டின் உயிருள்ள தலைவரை போர் அறிவிக்காமலும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதும் படுகொலை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. 'வசுதைவ குடும்பகம்' என்று பேசும் இந்தியா, இத்தகைய இக்கட்டான தருணத்தில் மௌனம் காப்பது அதன் சர்வதேச நம்பகத்தன்மையை கடுமையாக குறைக்கும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், "1994இல் காஷ்மீர் விவகாரத்தில் ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் அளித்த பங்களிப்பு மறக்க முடியாதது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் ஈரானுடன் பேணப்பட்ட ஆழமான ராஜதந்திர உறவுகளை பாஜக அரசு கைவிட்டுவிட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இத்தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை திசைமாறியுள்ளதாகவும், நாட்டின் தார்மீக தலைமைத்துவம் கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது, இந்திய அரசின் "கவலை தரும் மௌனம்" குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: எனது சிறந்த நண்பர் மோடி!! புகழ்ந்து தள்ளும் நெதன்யாகு! இந்தியா ஆதரவு? இஸ்ரேல் பாராட்டு?