2017 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அனிதாவின் தற்கொலை, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பு அலைகளையும் ஏற்படுத்தியது. அனிதாவின் தற்கொலை, நீட் தேர்வு முறையின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்னெடுத்தது. இது கல்வி முறையில் சமூக நீதி மற்றும் வாய்ப்பு சமத்துவம் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியது.
மாணவி அனிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தியவள் மாணவி அனிதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தியதாக கூறினார். தீக்குச்சி இல்லாமல் தெய்வங்கள் இல்லை தான் என்றும் ஆனால் ஒவ்வொரு முறையும் யார் தீக்குச்சி ஆக்கப்படுகிறார்கள் என்பது தான் கேள்வியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்படி ஒரு தீக்குச்சியாகி கல்வி உரிமைக்கான புரட்சித் தீயை தமிழ் மண்ணில் பற்ற வைத்தவர் மாணவி அனிதா என்று புகழாரம் சூட்டினார். அனிதா ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் பேரதிர்வை உண்டாக்கிய போதிலும், அவரைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட தமிழ் பிள்ளைகள் இன்னுயிரை இழந்துவிட்ட போதிலும் என்றுவரை நீட் தேர்வினை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியவில்லை என்பது பெருங்கொடுமை என்று வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலை வெட்டி இல்ல போல! மீண்டும் மீண்டும் விஜயை சீண்டும் சீமான்..!
அனிதா வீட்டிற்கே சென்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம், நீட்டை ஒழிக்கும் இரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் இரகசியத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதுதான் நம்முடைய நீண்டநாள் கேள்வியாக இருக்கிறது என்றும் அனிதா கண்ட பெருங்கனவை நிறைவேற்றுகின்ற உறுதியை ஏற்போம் எனவும் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஒன்றல்ல... இரண்டல்ல... 1,275 முறை...” - 16 வயது சிறுவனை தற்கொலைக்குத் தூண்டிய சாட்ஜிபிடி... பகீர் சம்பவம்...!