தலைநகர் டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 5-ந் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களம் அதிரிபுதிரியாக பற்றி எரிகிறது. 

சுதந்திர இந்தியாவில் முதல் 5 ஆண்டுகள் டெல்லிக்கு என்று தனியாக முதலமைச்சர் யாரும் இல்லை. 1952-ல் காங்கிரஸ் கட்சியின் பிரகாஷ் 2 ஆண்டுகளும், குர்முக் ஓராண்டும் முதலமைச்சர்களாக பதவி வகித்தனர். பின்னர் 1993 வரை டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 1993-ல் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் மதன்மோகன் குரானா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2 ஆண்டுகளும், சாஹிப் சிங் வர்மா இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சர்களாக செயல்பட்டனர். வெறும் 52 நாட்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் முதலமைச்சராக இருந்தார். 
இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் தில்லுமுல்லு: அதிகாரிகள், பாஜகவிடம் சரண் அடைந்து விட்டனர்; கெஜ்ரிவால் சரமாரி குற்றச்சாட்டு.. 
அதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஹாட்ரிக் சாதனை படைத்தார் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித். மொத்தம் 15 ஆண்டுகள் அவர் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இக்காலகட்டத்தில் தான் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பித்தார் சமூக சேவகர் அன்னா ஹசாரே. அவரது போர்த்தளபதிகளில் ஒருவராக களமாடியவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கி அவர் நேரடி அரசியலில் குதித்தார். 2013-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். ஆனால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு அவர் ஆட்சியை இழந்தார். ஓராண்டு காலம் குடியரசுத் தலைவர் ஆளுகையின் கீழ் டெல்லி செயல்பட்டு வந்தது.

2015-ம் ஆண்டு தேர்தலில் முழுவீச்சுடன் களம் கண்ட ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை கட்டுக்குள் கொண்டு நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் புதிய முறைகள் எனவும் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் டெல்லி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பலனாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற சடடப்பேரவை மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி. இந்தமுறை வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 62. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வரானார்.  ஆனால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட அக்கட்சியின் அதிஷி தற்போது முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் மும்முனை போட்டியில் களம் காண்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒன்றாக போட்டியிட்ட நிலையில் கடும் தோல்வியை சந்தித்தன. இதனால் சுதாரித்துக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டார். 
தங்களின 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளிட்டவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக கூறி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது ஆம் ஆத்மி. அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது டெல்லிக்கு பேரிடராக அமையும் என கூறி தனது பிரச்சாரத்தை துவக்கி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பேரணி ஒன்றை டெல்லியில் நடத்திக் காட்டி வாக்குகளை கோர தொடங்கி உள்ளது காங்கிரஸ். 
ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா? பாஜக இம்முறை பலம் கொண்டு எழுமா? தனது வெற்றிக் கணக்கை இம்முறையாவது காங்கிரஸ் தொடங்குமா? என்ற கேள்விகள் டெல்லி அரசியல் களத்தை உச்சக்கட்ட பரபரப்பில் வைத்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ்( இந்தியா) கூட்டணிக்கு  சாவு மணி..! கலைத்து விடலாம் என உமர் அப்துல்லா அதிர்ச்சி..