அமெரிக்க அதிபராக, 2-வது முறையாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றார். அமெரிக்காவுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்த அவர், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். இதில் இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
எனினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. இதையடுத்து, இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப்.
இதையடுத்து, அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. 90 நாள் காலக்கெடு வரும் 9-ம் தேதி நிறையவடைய உள்ள நிலையில், பிரிட்டன், வியட்நாம் ஆகிய 2 நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதையும் படிங்க: போரில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பிடம் கட் அன் ரைட்டாக பேசிய புடின்! சிக்கலில் உக்ரைன்..!

இந்நிலையில், 12 நாடுகளுக்கான வரி விதிப்பு தொடர்பான உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4-ம் தேதி கையெழுத்திட்டுள்ளார். எந்தெந்த நாடுகள் என்ற விவரம் நாளை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது ;
12 நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை வெளியிடப்படும். அன்றைய தினம் அந்தந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு விடும். இதை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிட்டு விடுங்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு 70 சதவீதம் வரையில் வரிவிதிப்பு இருக்கும். ஆக.,1 முதல் இந்த புதிய வரி அமலுக்கு வரும் என்றார்.

இந்த 12 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதா என தெரியவில்லை. அதேநேரம், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் 12 நாடுகள் உடனான வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளார். இதன்மூலம், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவகாசம் தந்திருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற உயர்மட்ட இந்தியக் குழு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது. அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை அணுகல் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே ஜூலை 9 ஆம் திகதிக்குள் வரி விலக்கு பெற இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் எந்த காலக்கெடுவின் கீழும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்காது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, இந்தியா மீது அமெரிக்கா தன்னிச்சையாக வரி விதித்தால், அந்த நாடு விதிக்கும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!