சென்னை: தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச லேப்டாப்களில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருவப்படங்களை மாணவர்கள் ஸ்டிக்கர்கள் ஒட்டி மறைத்து வருவதால் சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடந்து வருகிறது.
2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, தமிழகத்தில் பல்வேறு பட்டப்படிப்புகள் பயிலும் 20 லட்சம் கல்லூரி மாணவ-மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஏசர், எச்.பி., டெல் நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த லேப்டாப்களின் மேற்பகுதியில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்துடன் 'தமிழ் வெல்லும்' என்ற வார்த்தையும், அவரது கையெழுத்தும் அச்சிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கண்டுக்காத எடப்பாடி! கலக்கத்தில் ஓபிஎஸ்! கூட்டணியா? தனிக்கட்சியா? 2வது நாளாக ஆலோசனை!
அதேபோல், முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்துடன் 'தமிழ்நாடு வெல்லும்' என்ற வார்த்தை, அவரது கையெழுத்து மற்றும் தமிழக அரசின் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன. மவுஸ் பகுதியில் கூட ஸ்டாலினின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த உருவப்படங்கள் அச்சிடப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிதியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் தலைவர்களின் உருவப்படங்களை அச்சிடுவது சரியா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச லேப்டாப்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை மாணவர்கள் விரும்பத்தக்கதாக கருதி அகற்றி பயன்படுத்தினர்.
தற்போது திமுக அரசு வழங்கிய லேப்டாப்களில் ஸ்டிக்கருக்கு பதிலாக நேரடியாக உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதை மறைக்க ஸ்டிக்கர்கள் ஒட்டி வருகின்றனர். சில மாணவர்கள் நடிகர் விஜய் அல்லது தங்களுக்கு பிடித்த பிற படங்களை ஒட்டி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இது திமுக ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
இந்த சர்ச்சை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நலத்திட்டங்களை கட்சி விளம்பரமாக மாற்றுவது சரியா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கிடையாது! காங்கிரஸை கைவிட்டது திமுக! விஜய் பக்கம் தாவ திட்டம்!