நேபாள-திபெத் எல்லையில் கடந்த 26 ஆகஸ்ட் அன்று ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தமிழக சுற்றுலாப் பயணிகள் உள்பட பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை உடைப்பு மற்றும் சகதிக் குவியல் ஆற்றில் விழுந்ததால் போட்டேகோஷி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், ராசுவா உள்ளிட்ட மாவட்டங்களைத் தாக்கியது.
பாலங்கள், சாலைகள் சேதமடைந்ததால் தொடர்பு துண்டிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் இரவுபகலாகத் தொடர்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலம் சென்ற யாத்திரைக் குழுக்களில் பலர் இந்த பேரிடரில் சிக்கினர்.
அவர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, காத்மாண்டு வழியாக டெல்லி சென்றபின் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அவர்கள், வெள்ளத்தின் பயங்கரத்தை விவரித்துள்ளனர். மீதமுள்ள தமிழர்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழலில், தமிழக அமைச்சர்கள் குழு மத்திய அரசு, இந்திய தூதரகம் மற்றும் நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நேபாளத்தின் அதிர்ச்சி மாற்றம்: பெருவெள்ளத்திற்கு முன்... பின்... செயற்கைக்கோள் படங்கள்!

இந்நிலையில், திபெத் பகுதியில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் நாளை நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் டெல்லிக்கு அனுப்பப்பட உள்ளனர். டெல்லி வந்ததும், 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் வழியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழு மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறது. பேரிடர் சூழலில் தொடர்பு சீர்குலைந்தாலும், அனைத்து தமிழர்களையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர அரசு முழு முயற்சியில் உள்ளது. குடும்பத்தினர் அமைதியுடன் காத்திருக்கும் நிலையில், மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளப் பேரிடர்: இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!!