அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
ஏப்ரல் 21 மாலையுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், பல கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!
இன்று சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், பிரதமர் நரேந்திர மோடியும் கோவை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் கோவை வருகை தருகிறார். மாலை 5:45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோதி மாலை 6 மணிக்கு அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்திற்கு செல்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் இரவு 7:15 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் மேற்கு வங்காளத்திற்கு பிரதமர் புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காலை 11:55-க்கு பொன்னேரியிலும், பகல் 1:15 மணியளவில் சோளிங்கர் பகுதியிலும், மாலை 4 மணியளவில் துறையூர் பகுதியிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. ராகுல் காந்தி பரப்புரை செய்ய உள்ள மூன்று தொகுதிகளுமே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் என்று தெரியவருகிறது.
இதையும் படிங்க: உலகிலேயே நம்பர் 1!! மீண்டும் சாதித்த மோடி!! பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 2ம் ஆண்டாக முதலிடம்!