வாஷிங்டன், டிசம்பர் 13: தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் எல்லைப் பிரச்னை சமீபத்தில் மீண்டும் மோதலாக வெடித்தது.
ஜூலை மாதம் ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் முயற்சியால் அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், சில தினங்களுக்கு முன் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது.
எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். எட்டு வீரர்கள் காயமடைந்தனர். பதிலுக்கு தாய்லாந்து விமானப்படை மூலம் கம்போடியா மீது தாக்குதல் நடத்தியது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்... பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... செல்வப் பெருந்தகை கண்டனம்...!
இதில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரீயா விஹார் கோயில் சேதமடைந்தது. மோதல்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், மீண்டும் போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சு நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன். இதன் விளைவாக இரு நாடுகளும் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன.
இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. இந்த முக்கியமான விஷயத்தில் உதவியதற்காக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தாய்லாந்து - கம்போடியா இடையே நூற்றாண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக பிரீயா விஹார் கோயில் பகுதி தொடர்பான பிரச்னை அடிக்கடி மோதலுக்கு காரணமாக உள்ளது. ஜூலை மாத மோதலுக்குப் பிறகு டிரம்ப் தலையீட்டால் அமைதி ஏற்பட்டது. ஆனால், சமீபத்தில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த மோதலில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு மோதல்கள் நிறுத்தப்படுமா என்று உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மலேஷியாவின் உதவியுடன் ஏற்பட்ட இந்த போர் நிறுத்தம் நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 120 கி.மீ டார்கெட்!! ரூ.2,500 கோடி பட்ஜெட்! மெர்சல் காட்டும் பினாகா ராக்கெட்! இந்தியா மாஸ்டர் ஸ்ட்ரோக்!